Akaram Makkal Kalaikoodam

நாடகம்

நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும்.

நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.

வரலாறு

'இயல்' என்பது சொல் வடிவம், 'இசை' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம், 'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.

"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் சேக்ஸ்பியர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை, தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.

ஆய்வுகள்

தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.

சொல் பிறப்பு

இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்தநூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு பிறந்த நாடகம், தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கி. பி. 900 முதல் கி. பி. 1300 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சிபெற்றன. கி. பி. 846 ஆம் ஆண்டு விசயாலய சோழனால் எழுச்சிபெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது. கி. பி. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் இராசேந்திர சோழன் காலத்தில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிபெற்றது. கி. பி. பதினேழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றனவற்றில் நடத்தப்பெற்ற நாடகக்கலை மக்கள் மன்றங்களில் மீண்டும் நடத்தப்பட்டன. சங்க காலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துக்கள் போலவே பதினேழாம் நூற்றாண்டுக் கால நாடக்கக்கலை மக்களின் கலையாக வளர்ச்சி பெற்று பின் பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற நாடகங்கள் தோன்றின.

இலக்கியக் குறிப்புகள்

நாடக வழக்கென்பது சுவைபட வருவதையெல்லாம் ஓரிடத்தில் வந்தனவாகத் தொகுத்துக் கூறுதலென விளக்குகின்றது இவ்வரிகள்.மேலும், இச்சுவைகள் தோன்றும் நிலைக்களன்கள் (பொருள்கள்) மூலம் முப்பத்திரண்டு சுவைகள் அடங்கும். இப்பொருள்கள் இரண்டு வகைப்படும் அவையாவன பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி,வடிவம் உணர்த்தப்படாதது ஒன்று மற்றொன்று பொருளின் தன்மையினையும் உணர்த்தி வடிவத்தினையும் உணர்த்துவதாகும்.இவ்விருவகையில் பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி வடிவம் உணர்த்தப்படாதனவை:காமம், வெகுளி (சினம்), மயக்கம், இன்பம், துன்பம் முதலியனவாகும். வடிவங்கள் இல்லாத இப்பொருள்களை,பொறிகளின் வாயிலாக மனங்கொள்வதற்கு மெய்ப்பாடுகள் காரணமாக அமைகின்றது. .

இம்மெய்ப்பாடானது கண்ணீர், மெய்மயிர் சிலிர்த்தல், வியர்வுதல், நடுக்கம் முதலியன புறக்குறிகள் கொண்டு ஒருவரது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே, காண்போர்க்கு புலனாகும் தன்மையே மெய்ப்பாடு எனப்படும். இவ்வகைச் சுவைகளே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக உலகின் அனைத்து நாடுகளிலும்,அனைத்து மொழி நாடகம்,திரைப்படம் போன்ற கலை வடிவங்களிலும் கருதப்படுகின்றன.மேலும் இத்தகு நாடகச்சுவைகளினைப் பற்றித் தொல்காப்பியர் அவர் காலத்தில் குறிப்பிட்டுள்ளதனால் அவருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர் நாடகக்கலை பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமென்பதுமாகக் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது