Akaram Makkal Kalaikoodam

சங்கீதம்

இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும்.

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் தொனி(ஒலி)களைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர்.

இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்[

வரலாறு

தொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பல பொருட்களில் இருந்து, பண்டைய காலத்தில் இசை எவ்வாறு இருந்தது என்பதை ஊகித்தறிய முடிகிறது. பழைய கற்காலத்தில் மனிதர்கள் எலும்புகளில் துளைகளையிட்டு புல்லாங்குழல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஏழு துளைகள் கொண்ட புல்லாங்குழல், மேலும் சில வகையான நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் என்பன, தொல்பொருளாய்வில் சிந்துவெளி நாகரிகம் இருந்த காலத்திலிருந்து பெறப்பட்டிருக்கின்றன.

இந்தியா மிகப் பழமையான இசை மரபைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதாக அறியப்படுகிறது. மிகப் பழமையானவையும், மிக அதிக அளவிலான பழைய கற்கால இசைக்கருவிகள் சீனாவில் இருப்பதாக அறியப்படுகிறது. அவை 7000 – 6600 கி.மு விலானவையாக இருக்கின்றன.

ஆய்வுகள்

இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்கள் / இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப்பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர் செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசை மரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன.

சொல் பிறப்பு

மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது பண்ணிசைக்கு ஏற்பக் காலடி வைத்து ஆடும் ஆட்டம். நாடகம் என்பது கதை நிகழ்வைக் காட்டும் தொடர் கூத்து. சங்ககாலத்தில் கூத்து ஆடியவரைக் கூத்தர் என்றனர். நாடகம் ஆடியவரைப் பொருநர் என்றனர்.

கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப் பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு. "மண் வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் இளையராஜா. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா."

இலக்கியக் குறிப்புகள்

பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசை எனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.

இந்திய இசை தனி இசை (melody)யை ஆதாரமாகக் கொண்டது. மேற்கத்திய இசை கோர்வை இசை (harmony)யை ஆதாரமாகக் கொண்டது. இந்திய இசையின் இராக அமைப்பு, பகைச்சுரங்களைக் கொண்ட மேளங்கள் 40ம், பகைச்சுரங்கள் இல்லாத மேளங்கள் 32ம் இன்று கருநாடக இசையில் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவை தேவாரப் பண்கள் ஆகும். இந்திய இசை வரலாற்றிலேயே இராக தாளத்துடன் நமக்குக் கிடைக்கப்பட்ட மிகப் பழமையான இசை வடிவம் தேவாரம் ஆகும். எண்ணற்ற இராகங்களுக்குத் தேவாரப் பண்களே ஆதாரமாயிருந்தன. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே வகையான இசைதான் இருந்தது. அக்காலத்தில் இந்துஸ்தானி, கர்நாடகம் என்று பிரிவு ஏற்படவில்லை. எனவே இந்திய இசைக்கே ஓர் அடிப்படியாக இருப்பது பண்கள் என்று கூறலாம்.