நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம்.
நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிவமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதுவது உண்டு.
வரலாறு
தேனீக்கள் போன்ற சில விலங்குகளும் சில வேளைகளில் நடனத்தைப் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சீருடற்பயிற்சி (Gymnastics), ஒத்திசை நீச்சல் (synchronized swimming), நடனப் பனிச்சறுக்கு (figure skating) போன்ற விளையாட்டுக்கள் நடனத்தையும் தம்முள் அடக்கியவையாக உள்ளன. கட்டா எனப்படும் தற்காப்புக் கலையும் நடனங்களுடன் ஒப்பிடப்படுவது உண்டு. உயிரற்ற பொருட்களின் அசைவுகள் நடனம் எனக் குறிப்பிடப்படுவது இல்லை.
நடனம் என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது என்பது குறித்துச் சமூக, பண்பாட்டு, அழகியல், கலை, நெறிமுறைகள் போன்றவற்றின் எல்லைகளுக்குள்ளேயே விளக்கமுடியும். சில நாட்டுப்புற நடனங்கள் பயன்பாட்டுத்தன்மை கொண்ட அசைவுகளை உள்ளடக்கியிருக்க, பலே, பரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை உட்படுத்தியவையாக உள்ளன. நடனங்கள் எல்லோரும் பங்குகொண்டு ஆடுபவையாக, சமூக நடனங்களாக அல்லது பார்வையாளருக்கு நிகழ்த்திக் காட்டுவனவாக இருக்கலாம்.
ஆய்வுகள்
நடனத்தின் தோற்றத்தை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவான தொல்பொருட் சான்றுகள் இல்லை. இதனால், எப்போது நடனம் மனிதப் பண்பாட்டின் ஒரு பகுதியானது என்று சொல்ல முடியாது. எனினும், நடனங்கள் போன்ற செயற்பாடுகள் இருந்தமையைக் காட்டும் சான்றுகள் பல்வேறு இடங்களிலும் கிடைத்துள்ளன. மிகப் பழைய மனித நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்னரே சடங்குகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பல காரணங்களுக்காக நடனங்கள் மனித வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருக்கக்கூடும். வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே நடனங்கள் ஆடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கும் வகையிலான சான்றுகளைத் தொல்லியல் வழங்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை வாழிடங்களில் காணப்படும் ஓவியங்களில் காணப்படும் உருவங்கள் சில நடனமாடுவதைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. கிமு 3300 காலப்பகுதியைச் சேர்ந்த எகிப்தியக் கல்லறை ஓவியங்களிலும் இத்தகைய உருவங்கள் உள்ளன. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்படுகின்றன.
சொல் பிறப்பு
தொன்மங்களைக் கூறுவதற்கும் நிகழ்த்திக் காட்டுவதற்காகவுமே முதன்முதலாக முறையான நடனங்கள் ஆடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எதிர்ப் பாலாருக்குத் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவும் மனிதர்கள் நடனத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். காதல் புரிவதோடும் நடனங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன. எழுத்து மொழி உருவாவதற்கு முன்னர் கதைகளைப் பிந்திய தலைமுறைகளுக்குக் கடத்துவதில் நடனங்களும் பயன்பட்டன.நோய்களைக் குணப்படுத்துவதற்காச் சாமியாடுதல், வெறியாட்டு போன்றவற்றுக்கு முன்னோடியாகவும் நடனங்கள் விளங்கின. இது நடனத்தின் முதல் பயன்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
பிரேசிலின் மழைக்காடுகள் முதல் கலகாரிப் பாலைவனம் வரை உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான தேவைகளுக்கு நடனங்கள் இன்றும் பயன்படுவதைக் காணமுடியும்.
நடனம் ஆடுபவர் கலைஞன் எனவும் நடனத்தை கற்றுத்தருபவர் நடன ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றனர். இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவையில் நடனக் காட்சிகள் திரைப்படப் பாடல்களுடன் ஆடப்படுவது வழக்கமாகும்.
இலக்கியக் குறிப்புகள்
நடனக்கலையை தோற்றுவித்தவன் சிவன் என கருதப்படுகிறது. பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். பரத முனிவர் எழுதியதாக கருதப்படும் நாட்டிய சாத்திரம் பரத நாட்டியம் என்னும் நடனக் கலையை தோற்றுவித்தது எனவும் கூறப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் நடனமான ஒட்டர மாகிதி என்னும் நடனவகையும் இந்தியாவில் ஒரு பண்டைய நடனக்கலையாகும்.
Cosmic Dance என்று அறிஞர்களால் விவரிக்கப்படும் தில்லை நடராசப் பெருமானின் ஆனந்த நடனமும், ருத்ர தாண்டவமும் குறிப்பிடத்தக்கவை. நடனத்திற்கென தமிழகத்தில் பொன்னம்பலம் சபை, வெள்ளி சபை, தாமிர சபை முதலான சபைகள் இருந்துள்ளன. அவைகளில் எல்லாம் ஆடல்வல்லான் ஆடிய அற்புத நடனங்கள் விவரித்துக் கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் இந்த பரந்து விரிந்த இந்திய நாட்டில் பலவகையான நடனங்கள் ஆடப்பட்டு வருகின்றன
தங்களின் தகவலுக்கு நன்றி, நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம்.